கோத்தகிரி மூனுரோடு, கேசலாடா பகுதிகளில் கரடிகள் நடமாட்டம்: கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தல்
கோத்தகிரி, ஜூலை 26: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நாவல் பழம் சீசன் துவங்கி உள்ளதால் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால், அதை கூண்டுவைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரவேனு, மூனுரோடு, கேத்தரின் நீர்வீழ்ச்சி, பன்னீர், ஆடத்தொரை, அளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்டங்கள், சாலைகளில் அதிக நாவல் பழ மரங்கள் உள்ளன.
தற்போது நாவல் பழம் சீசன் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவு காய்க்க துவங்கி உள்ளதால் இவற்றை சாப்பிடுவதற்காக பகல் நேரங்களில் சாலைகள், தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்ல அச்சம் அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் சாலை, குடியிருப்பு போன்ற பகுதிகளில் உலா வருவதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். சில நேரங்களில் பொதுமக்களை துரத்தவும் செய்வதால் வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து, முதுமலை போன்ற அடர்ந்த வனப்பகுதிக்குள் கரடியை விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.