குழந்தைகளின் நலனை பேணிக்காத்த சேவை நிறுவனங்களுக்கு விருது
ஊட்டி, ஜூலை 24: குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு “முன்மாதிரியான சேவை விருதுகள்’’ வழங்கப்படவுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் இயங்கும் நிறுவனங்களில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு “முன்மாதிரியான சேவை விருதுகள்’’ ரூ.4 லட்சம் செலவினத்தில் வழங்கப்படும்.
இந்த முன்மாதிரியான சேவை விருதுகள் அரசின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் தலா ரூ.1 லட்சம் என வழங்கப்படுகிறது.
மேற்கண்ட விருதுகளுக்கு உரிய வழி முறைகள், தகுதிகள் மற்றும் குறியீடுகளின்படி தகுதியுடைய குழந்தைகள் இல்லங்கள் உரிய ஆவணங்களுடன் கூடிய கருத்துருவினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் 31.07.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்பிக்க ேவண்டும். மேலும், விவரம் வேண்டுவோர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.