தாய், மகளிடம் நகை பறித்த வாலிபர் கைது
நாமக்கல், ஜூலை 24: மோகனூர் அருகே காரில் வந்து தாய், மகளிடம் நகை பறித்த, திருச்சியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கோமதி (49). இவரது மகள் பவித்ரா (26). இருவரும் நேற்று முன்தினம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்று விட்டு, முசிறியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஸ்கூட்டரில், நாமக்கல்லுக்கு வந்தனர். வழியில், வளையப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த மர்ம ஆசாமி, இருவரையும் மிரட்டி கோமதி, அவர்கள் அணிந்திருந்த, மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு, காரில் தப்பிச்சென்றார். இதுகுறித்து மோகனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து தப்பிச்சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து மோகனூர் போலீசார், அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கரூரில் வைத்து காரில் தப்பிச்சென்ற மர்ம நபர் ஒருவரை போலீசார் பிடித்து, மோகனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன்(39) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.