தபால் அலுவலகங்களில் 2ம் தேதி சேவைகள் ரத்து
நாமக்கல், ஜூலை 31: நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறையின் மென்பொருள் தரம், வரும் 4ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமும் இன்றி செயல்படுத்த வசதியாக, வரும் 2ம் தேதி பரிவர்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாமக்கல் அஞ்சல் கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் சிறு சேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வது மற்றும் கணக்கில் இருந்து பணம் எடுப்பது ஆகிய சேவைகளை 2ம் தேதி பெற இயலாது. மேலும் பதிவு தபால், விரைவு தபால், ஆதார், பார்சல் அனுப்புவது மற்றும் காப்பீட்டு ப்ரீமியம் தொகை செலுத்துதல் போன்ற அனைத்து சேவைகளும் 2ம் தேதி நடைபெறாது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது அஞ்சல் பரிவர்த்தனையை முன்கூட்டியே திட்டமிட்டு, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.