மணற்கேணி செயலி குறித்து செயல்விளக்கம்
சேந்தமங்கலம், ஆக. 1: புதுச்சத்திரம் அருகே, அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மணற்கேணி செயலி குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. புதுச்சத்திரம் ஒன்றியம், செல்லியாயிபாளையம் அரசு தொடக்க பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு மணற்கேணி செயலி குறித்த செயல்விளக்க பயிற்சி முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுதா தலைமை வகித்து பேசுகையில், ‘தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட இந்த செயலியில், ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்கள் அனைத்தும் தெளிவான காணொளிகளுடன் உள்ளது. மருத்துவம் சட்ட கல்லூரி சார்ந்த படிப்பு நீட், ஜேஇஇ சார்ந்து படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டியாகவும் இச்செயலி பயன்படுகிறது. போட்டித் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள, இச்செயலியில் உள்ள காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,’ என்றார். களங்காணி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் தானியா, மணற்கேணி செயலியின் பயன்பாடுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து செயல்விளக்கம் அளித்தார்.