வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கை பலகை வைப்பு
நாமக்கல், ஜூலை 29: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழையால், கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளது. இதையடுத்து அணைகளுக்கு வரும் உபரிநீர் முழுமையாக காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. அணையில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், மோகனூர் ஆகிய பகுதிகளில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மோகனூர் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்கள் காவிரி படித்துரையில் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான எச்சரிக்கை பலகை ஆற்றின் அருகில் வைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் புதை குழிகள், சுழல்கள் உள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, கால் நடைகளை அழைத்து செல்லவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.