34 கோழிகளை குதறி கொன்ற தெருநாய்கள்
பள்ளிபாளையம், ஆக.3: பள்ளிபாளையம் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த தெரு நாய்கள், அங்கிருந்து 34 கோழிகளை கடித்து குதறி கொன்றது. பாதிக்கப்பட்டவருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சமய சங்கிலி ஊராட்சி, தொட்டிபாளையம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஜயகுமார், தனது தோட்டத்தில் 34 நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் கோழிகளை கொட்டகையில் அடைத்து விட்டு விஜயகுமார் சென்றார். நேற்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது, கொட்டகையை சுற்றி கட்டப்பட்டிருந்த நைலான் வலைகள் பல இடங்களில் கிழிக்கப்பட்டிருந்தது. உள்ளே அடைக்கப்பட்டிருந்த 34 நாட்டுக்கோழிகளும் இறந்து கிடந்ததை கண்டு விஜயகுமார் திடுக்கிட்டார். நள்ளிரவு நேரத்தில் தெருநாய்கள், வலையை கிழித்து உள்ளே புகுந்து, அங்கிருந்த நாட்டுக்கோழிகள் அனைத்தையும் கடித்து குதறி கொன்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டார். மேலும், வருவாய் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கால்நடை உதவி மருத்துவர் சுரேஷ் சம்பவ இடத்தில் பார்வையிட்டார். சமயசங்கிலி, ஆவத்திபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் ஆடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளை தெருநாய்கள் கடித்து குதறுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.