விதிகளை மீறி நீர்நிலைகளில் மண் திருடும் மர்ம கும்பல்
நாமகிரிப்பேட்டை, ஜூலை 24: நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில், விதிகளை மீறி நீர் நிலைகளில் மண் திருடும் கும்பல் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு ஏரி, குளம், குட்டைகளில் வண்டல் மண் அள்ளுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில் எவ்வளவு யூனிட் மண் எடுக்கலாம் என்பது குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து, அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரின் தடையில்லா சான்று பெற்று, அதன் அடிப்படையில் மண் அள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காக்காவேரி ஏரி, ஆர்.புதுப்பட்டி மலையடிவாரம், ஆர்.பி.காட்டூர் பகுதியிலுள்ள ஓடை, ஆர்.புதுப்பட்டியில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலையில் சர்ச் அருகில் உள்ள ஓடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும், பல மடங்கு கிராவல் மண் திருடப்படுகிறது.
மேலும், அனுமதி ரசீதுகளை போலியாக அச்சடித்தும் மண் கொள்ளை நடக்கிறது. இதனால் குளம், குட்டைகள் குவாரிகள் போல் ஆழமாக்கப்பட்டுள்ளன. மண் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் பல முறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கனிம வளம் திருடு போவதை கண்காணித்து ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை, கனிம வளம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.