ஜார்கண்ட் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்
பள்ளிபாளையம்,ஜூலை 25: கடத்தல்காரர்களிடம் இருந்து செல்போன், பணம் ஆகியவற்றை மீட்ட போலீசார், அவற்றை கோர்ட் மூலம் ஜார்கண்ட் தொழிலாளர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். ஜார்கண்ட் மாநிலம் தம்தரா மாவட்டம் சபன்பூர் போர்வா கிராமத்தை சேர்ந்தவர் இர்பான் அன்சாரி(20). இவரது உறவினர்கள் ஜாசிம் அன்சாரி, அர்பாஜ் அன்சாரி, இர்சாத் அன்சாரி, கிஷ்மத் அன்சாரி, உல்பத்அன்சாரி ஆகியோருடன், கடந்த 21ம்தேதி வேலை தேடி சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் இறங்கினர். அப்போது பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை அண்ணா நகரை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல், அவர்களை அனுகி நூற்பு ஆலையில் வேலை செய்த ஆட்கள் தேவை என கூறி அழைத்துசென்றனர்.
வெப்படையில் ஒரு வீட்டில் அவர்களை அடைத்து வைத்த கும்பல், ஜார்கண்ட் தொழிலாளர்களை சரமாரியாக அடித்து உதைத்ததுடன், அவர்களின் குடும்பத்தினருடன் செல்போனில் பேச வைத்து மிரட்டி, 1.25 ரூபாய் பணத்தை ஆன்லைன் வங்கி கணக்கில் போட வைத்து பறித்துக் கொண்டனர். பின்னர் தொழிலாளர்கள் 6 பேரின் செல்போன்களை பறித்துக்கொண்டு துரத்தி விட்டனர். இது குறித்து அவர்கள் வெப்படை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் வெப்படை அண்ணா நகரை சேர்ந்த 7 பேரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஜார்கண்ட் தொழிலாளர்களின் செல்போன்கள், பணம் ஆகியவற்றை மீட்ட போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு குற்றவாளிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன், பணம் ஆகியவற்றை ஜார்கண்ட் தொழிலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் 6 பேரும் ரயில் மூலமாக, தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.