வங்கியில் வேலை வாங்கித் தருவதாக பல கோடி மோசடி; மதுரை கமிஷனரிடம் மயிலாடுதுறை ஐடி ஊழியர்கள் புகார்
மதுரை, ஜூலை 26: தேசிய வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி நடந்துள்ளதாக மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் நேற்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த 2 பேர், கடந்த 2017ம் ஆண்டு பழக்கமாகினர். தேசிய வங்கி ஒன்றில் பணியிடம் காலியாக உள்ளது. அந்த வேலையை வாங்க ரூ.5 லட்சம் செலவாகும். ஒன்றிய நிதி அமைச்சகத்தில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் உள்ளனர் என்றனர். இதை நம்பி அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டது. தண்டையார்பேட்டை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் வாடிக்கையாளர்களுக்கு இணைய பரிமாற்ற சேவையைப் பற்றி எடுத்துக் கூறும் தற்காலிக பணியை ஒதுக்கினர். விரைவில் நிரந்தர பணி ஒதுக்குவதாகவும் கூறினர்.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் நிரந்தர பணி ஒதுக்கவில்லை. ஆனால், கூடுதலாக பணம் கொடுத்தால் நிரந்தர பணி கிடைக்கும் என கூறினர். இதன்படி மேலும் பணம் தரப்பட்டது. அதன் பிறகும் நிரந்தர பணி ஆணை வழங்கவில்லை. ஆரப்பாளையத்திற்கு ரவியை பார்க்க சென்றபோது வீடு பூட்டியுள்ளது. அருகில் விசாரித்ததில் வீட்டை காலி செய்து விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறினர். இது போல நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.5 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. எனவே, இருவரையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளனர். இந்த புகார் மனுவை விசாரிக்குமாறு மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.