2 கிலோ கஞ்சாவுடன் 4 வாலிபர்கள் கைது
மதுரை, ஜூலை 30: மதுரை முத்துப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது கையில் வெள்ளை சாக்கு மற்றும் பைக்குடன் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், அவர்கள் தனக்கன்குளம் சௌபாக்கிய நகர் முத்தையா மகன் ஜஸ்டின் பிரபாகரன்(23), தனக்கன்குளம் வடக்கு தெரு சௌந்தரபாண்டி மகன் சிவராம பாண்டியன்(22), மதுரை தென்பழஞ்சி கோபால் மகன் அருண்பாண்டி(20), பைக்காரா முத்துராமலிங்கபுரம் புதுமேட்டு தெரு உதயகுமார் மகன் பிரிதிவிராஜ்(24) என தெரிந்தது. போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா, 4 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.