திருப்பரங்குன்றத்தில் தனியார் பஞ்சு குடோனில் தீ: பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்
திருப்பரங்குன்றம், ஜூலை 29: திருப்பரங்குன்றத்தில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு குடோனில் நேற்று திடீரென தீப்பற்றியது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். திருப்பரங்குன்றத்தில் இருந்து அவனியாபுரம் செல்லும் சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு குடோன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை அங்கு வழக்கம்போல் வேலை ஆட்கள் பணியில் இருந்தனர். அப்போது பஞ்சு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உருவான தீப்பொறி அருகருகே வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளில் பற்றியது .இதனால் அவை பற்றி எரியத்தொடங்கின. மேலும் இந்த தீ வேகமாக பரவியதால், அப்பகுதி முழுவதும் இருந்த பஞ்சு கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதற்கடையே பணியில் இருந்த அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். ஆனால் அது முடியாது போனது. இதையடுத்து மதுரையிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் விரைந்து வந்தனர்.
மேலும் மாநகராட்சி தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டன. பின்னர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஞ்சு குடோனில் பற்றிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சாம்பலானது. இந்த திடீர் தீ விபத்த்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.