திருமங்கலம் அருகே சர்வீஸ் சாலைக்கு எதிராக மறியல்
திருமங்கலம், ஜூலை 29: திருமங்கலம் அருகே புதிதாக அமைக்கப்படும் சர்வீஸ் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் செங்குளம் பகுதியில் நான்கு வழி சாலைக்கு அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பல ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தும் நடைபாதை மறைக்கப்படுகிறது. இதனால் தங்களது விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் போகும் என்று கூறி, சர்வீஸ் சாலைக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று திடீரென புதிய சர்வீஸ் சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலை அமைக்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல மாற்றுச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.