கட்டுமான பொருட்கள் மீது பச்சை வலையால் மூடப்பட வேண்டும்
மதுரை, ஜூலை 25: புதிய கட்டுமானங்களுக்கான பொருட்களால் இடையூறு ஏற்படுவதை தடுக்க, பச்சை வண்ண வலை கொண்டு மூட வேண்டுமென மதுரை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அறிக்கை: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய கட்டுமானங்கள் நடைபெறும்போது, கொண்டு செல்லப்படும், சேகரித்து வைக்கப்படும் கட்டுமானப் பொருட்கள் காற்றில் பறந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
எனவே, கட்டுமானப் பொருட்கள் காற்றில் பறக்காதவாறு பச்சை வண்ண வலை கொண்டு மூடவும், கட்டுமானப் பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்களையும் இதுபோன்ற வலை கொண்டு மூடி இயக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கட்டுமானங்களை இடிக்கும் போது தூசி பரவுவதை தடுக்கும் வகையில் பச்சை வண்ண வலை அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பணியினை மேற்கொள்ள வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.