மின் மோட்டார் ஒயரை திருடிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி, ஜூலை 26: பர்கூர் அருகே மின் மோட்டார் ஒயரை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பர்கூர் அருகே மல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். விவசாயியான இவர், நேற்று வழக்கம்போல் தனது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள கிணற்றில் இருந்து ஒரு வாலிபர், மின் மோட்டார் ஒயரை திருட முயற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்து கூச்சலிட்டார்.
சத்தம்கேட்டு அக்கம் -பக்கத்தினர் விரைந்து வந்து வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து பர்கூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியைச் சேர்ந்த சிவா(28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.