நிலம் கையகப்படுத்தும் பணி 3 மாதங்களில் தொடங்குமா?
கிருஷ்ணகிரி, ஜூலை 28: ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி, இன்னும் 3 மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழக -கர்நாடக மாநில எல்லையில் உள்ள நகரமாகும். குண்டூசி முதல் விமானம் தயாரிக்க கூடிய நிறுவனம் வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், பிரபல கைகடிகாரங்கள் உள்பட ஓசூரில் அனைத்து விதமான தொழிற்சாலைகளும் உள்ளன. மேலும் புதிய தொழில்முனைவோர்கள் பலரும் ஓசூரில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஊராட்சி நிலையில் இருந்த ஓசூர் பேரூராட்சி, நகராட்சி, சிறப்பு நிலை நகராட்சி என படிப்படியாக உயர்ந்து தற்போது மாநகராட்சி அந்தஸ்தில் திகழ்கிறது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஓசூருக்கு நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர். ஓசூரில், இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல 6 வழிச்சாலைகள், ரயில் போக்குவரத்து என அனைத்து வசதிகளும் இருந்தும், விமான சேவை இல்லாமல் இருந்தது.
இதனால் ஓசூர் பகுதி மக்கள், பெங்களூரு விமான நிலையத்திற்கே செல்ல வேண்டிய நிலை இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும், ஒன்றிய அரசின் உதான் திட்டத்தில் ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அது கனவாகி விட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதம் 27ம் தேதி சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 2 ஆயிரம் ஏக்கரில் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு தொடங்க உள்ளது. இதற்காக அரசு நியமித்த ஆலோசகர், இரண்டு இடங்களுக்கான தடையற்ற மேற்பரப்பு (ஓஎல்எஸ்) ஆய்வை சமர்ப்பித்துள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில், இன்னும் ஒரு மாதத்திற்குள் இடத்தை அரசு முடிவு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஓஎல்எஸ் அறிக்கையின்படி, இரண்டு இடங்களிலும் விமான நிலையம் கட்ட சாத்தியம் உள்ளது. முதலாவது டிஏஏஎல் விமான ஓடுபாதையில் இருந்து 1.5 கி.மீ தூரத்திலும், இரண்டாது ஓசூரில் இருந்து 15.5 கி.மீ சூளகிரிக்கு வடக்கிலும் அமைந்துள்ளது.
ஆனால், இரண்டு இடங்களிலும் சவால்கள் உள்ளதாக அறிக்கை சுட்டிகாட்டுகிறது. மேலும், விமான நிலையம் அமைக்க தனி விமான கட்டுப்பாட்டு மண்டலம் உருவாக்க பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இரண்டு மாதங்களில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் உடன் விரையில் அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
ஓசூரில் திட்டமிடப்பட்டுள்ள பிரத்யேக விமான நிலையத்தை அமைக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தளங்களும், விமான நிலையம் அமைக்க ஏற்றவை என்று முடிவு செய்துள்ளதாக நம்பப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், உள்ள வான்வெளியை மதிப்பிடுவதற்காக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட தடையற்ற வரம்பு மேற்பரப்பு ஆய்வில் இந்த முடிவு வந்துள்ளது. இதனால் மேற்காணும் 2 இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிடும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே முன்மொழியப்பட்ட ஓசூர் விமான நிலையத்திற்காக கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளியை நிறுவுவதற்கு ஒப்புதல் கோரி தமிழக அரசு பாதுகாப்பு அமைச்சத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது.
இதையடுத்து தடை வரம்பு மேற்பரப்பு கணக்கெடுப்பு என்று அழைக்கப்படும் (ஓஎல்எஸ்) சர்வேவை மேற்கொள்ள ஆலோசகரை நியமிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள வனப்பகுதி எவ்வளவு பாதுகாப்பானது, பயணிகள் விமானங்கள் செல்ல எவ்வளவு பாதுகாப்பு என்பதை சர்வே எடுக்கும் சோதனை ஆகும் இது. எனவே, விரைவில் ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் மூன்று மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.