யானை மீது சந்தனக்குட ஊர்வலம்
தேன்கனிக்கோட்டை, ஜூலை 26: தேன்கனிக்கோட்டை உருஸ் விழாவையொட்டி, யானை மீது சந்தனக்குட ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் யாரப் தர்கா 76வது உருஸ் விழாவை முன்னிட்டு, யானை மீது சந்தனக்குட ஊர்வலம் நடைபெற்றது. முத்தவல்லி முஜாமில்பாஷா, செயலாளர் மகபூப்கான் ஆகியோர் முன்னிலையில், முதல்நாள் தர்காவில் அபிஷேகம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு யானை மீது சந்தனக்குடம் வைத்து சிலம்பாட்டம், பேண்டு வாத்தியம், கோலாட்டம், புக்ராக்கரின் ஜர்பாத், குதிரை சாரட் வண்டி, ஆகியவற்றுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் அதிகாலை 4 மணியளவில் தர்கா வந்தடைந்தது. தொடர்ந்து சந்தன பூ அலங்காரம் பாத்தியா துவா செய்யப்பட்டது.
விழாவில் எம்எல்ஏக்கள் பிரகாஷ், ராமச்சந்திரன், பேரூராட்சி தலைவர் சீனிவாசன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என மூன்று மாநில பக்தர்கள் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்சியில் அன்னதானம், கவ்வாலி நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தர்கா முத்தவல்லி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.