3 பேருக்கு ஜாமீன் வழங்கியதால் சாலை மறியல் போராட்டம்
தேன்கனிக்கோட்டை, ஜூலை 26: தேன்கனிக்கோட்டையில் அடிதடி வழக்கில் கைதான 3 பேருக்கு ஜாமீன் வழங்கியதால், அதிருப்தியடைந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கடந்த 23ம் தேதி மாரியம்மன் கோயில் விழா நடைபெற்றது. அப்போது, தேன்கனிக்கோட்டை நேதாஜி தெருவைச் சேர்ந்த சக்திவேல் (30) என்பருக்கும், பழையூரைச் சேர்ந்த அம்ரீஸ் (25), அஜய் (24), பிருத்திவி ராஜ் (25) மற்றும் விக்னேஷ் (24) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், நான்கு பேரும் சேர்ந்து தாக்கியதில் படுகாயமடைந்த சக்திவேல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் அம்ரிஷ், அஜய், விக்னேஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதனையறிந்த சக்திவேல் தரப்பினர், நேற்று காலை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டனர். பின்னர், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி ஆனந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், எஸ்ஐ நாகராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.