குந்தாரப்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் 3 ஆண்டுகளில் 2153.97 டன் விளைபொருட்கள் கையாண்டு சாதனை
கிருஷ்ணகிரி, ஜூலை 25: கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.5.79 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பதப்படுத்தும் நிலையத்தில் 3 ஆண்டுகளில் 2153.97 டன் விளைபொருட்கள் பதப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டமானது வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு உகந்த சீதோஷ்ண நிலை உள்ள பகுதியாகும். இம்மாவட்டத்தில் பிரதான வேளாண் பயிர்களான நெல், கேழ்வரகு, துவரை, கொள்ளு, நிலக்கடலை, மா மற்றும் தென்னை அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி அருகே கே.ஆர்.பி அணை, ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை, ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை, சூளகிரி அருகே சின்னாறு அணை, பாரூர் பெரிய ஏரி ஆகியவை வேளாண் பயிர்கள் சாகுபடி செய்வதற்கான பிரதான நீராதாரங்களாக விளங்குகின்றன. கே.ஆர்.பி அணையின் வாயிலாக 9,012 ஏக்கர் நிலமும், கெலவரப்பள்ளி அணையின் மூலம் 9,083 ஏக்கர் நிலமும், பாரூர் பெரிய ஏரியின் மூலம் 2,400 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது.
சூளகிரி சின்னாறு அணையில் தண்ணீர் இருந்தால் 5,891 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். ஆக மொத்தம் மாவட்டத்தில் சுமார் 27,695 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அவ்வப்போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படும் புதிய தொழில் நுட்பங்கள், புதிய பயிர் ரகங்கள் ஆகியவற்றை விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் பாலமாக உழவர் பயிற்சி நிலையம் திகழ்கிறது. இந்த உழவர் பயிற்சி நிலையத்தின் மூலம் விவசாயிகளுக்கு கிராம அளவிலான 22 பயிற்சியும், உழவர் விவாதக்குழு அமைப்பாளர்களுக்கு 10 பயிற்சியும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சியின் போது, விவசாயிகளுக்கு செயல் விளக்கங்களும் செய்து காண்பிக்கப்படுகிறது. முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் விவாதக்குழு அமைப்பாளர்கள் அருகாமையில் உள்ள மண்டல ஆராய்ச்சி நிலையங்களுக்கு கண்டுணர்தல் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். புதிய தொழில்நுட்பத்தை கடைபிடித்து அதிக மகசூல் பெறும் விவசாயி ஒருவருக்கு சிறந்த விவசாயிக்கான பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் நலன் கருதி, வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம் பில்லனகுப்பம் ஊராட்சியில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், ரூ.5 கோடியே 79 லட்சம் மதிப்பில் குந்தாரப்பள்ளி முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 4 முதல் 5 மெட்ரிக் டன் அளவிலான விவசாய விளைபொருட்களை தரம் பிரித்து சிப்பமிடுதலுக்கான பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் கடந்த 2022-23ம் ஆண்டில் 654.97 மெட்ரிக் டன்னும், 2023-24ம் ஆண்டில் 118.50 மெட்ரிக் டன்னும், 2024-25ம் ஆண்டில் 1380.50 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 2,153.97 மெட்ரிக் டன் அளவிலான விளைபொருட்கள் பதப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.