தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா
ஊத்தங்கரை, ஆக.1: ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு தமிழின் பெருமைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு, தமிழ் இலக்கிய மன்றம் தொடங்கப்பட்டது. முதல் தொடக்க நிகழ்வாக 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களிடையே தமிழ் உணர்வை வெளிக்கொண்டு வரும் வகையில் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வடிவங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வை பள்ளியின் தமிழ் துறையை சார்ந்த ஆசிரியர்கள் ஏற்பாடு செய்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் பேச்சு, நாடகம், நடனம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவிற்கு வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அழியா வண்ணம், அகிலத்தில் ஒளிரும் மொழி, என் தமிழ் மொழி! என சிறப்புரையின் மூலம் மாணவர்களுக்கு தமிழின் பெருமையை எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் பள்ளி முதல்வர்கள், இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.