வாலிபரின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீவைப்பு
கிருஷ்ணகிரி, ஜூலை 29: கிருஷ்ணகிரியில், முன்விரோத தகராறில் வாலிபரின் வீட்டின் முன், கதவில் பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த லண்டன்பேட்டை நாயுடு தெருவை சேர்ந்தவர் ஜெய்அரவிந்த் (25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாபா உசேன் தெருவை சேர்ந்த இம்ரான் (34), தன்வீர் (19) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம், ஜெய் அரவிந்த் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இம்ரான், தன்வீர் ஆகியோர் ஜெய் அரவிந்திடம் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றிய நிலையில் இம்ரன், தன்வீர் ஆகியோர், ஜெய் அரவிந்தின் வீட்டின் முன் கதவில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் கதவு எரிந்து நாசமானது. இதுகுறித்து ஜெய் அரவிந்த் அளித்த புகாரின் பேரில், டவுன் போலீசார் விசாரணை நடத்தி இம்ரான், தன்வீர் ஆகியோரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர். இதேபோல் இம்ரான் கொடுத்த புகாரின் பேரில், ஜெய் அரவிந்தையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இவர்கள் 3 பேர் மீதும் டவுன் போலீசில், ஏற்கனவே அடிதடி வழக்கு உள்ளது