டூவீலர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த கார்
ஊத்தங்கரை, ஜூலை 29: ஊத்தங்கரை அருகே, டூவீலர் மீது மோதி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே தாங்கல் பகுதியை சேர்ந்தவர் விஸ்வா. இவர் டூவீலரில் ஊத்தங்கரை அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியில், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம், சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த கார், டூவீலர் மீது மோதியது. மோதிய வேகத்தில் சாலையின் பக்கவாட்டு பள்ளத்தில், கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் வந்த இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்ஐ மோகன் மற்றும் போலீசார், பள்ளத்தில் கவிழ்ந்த கிடந்த காரில் இருந்த 6 பேரை மீட்டனர். அவர்கள் அனைவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். டூவீலரில் வந்த விஸ்வாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், பள்ளத்தில் கவிழ்ந்த கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.