கம்பு விளைச்சல் அதிகரிப்பு
ராயக்கோட்டை, ஜூலை 29: ராயக்கோட்டையில் கம்பு விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் விவசாயிகள் மலர்களுக்கு அடுத்தபடியாக கம்பு, சோளம் ஆகியவற்றை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர். நெல் மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களின் சாகுபடியில் வருவாய் ஈட்டி வந்த நிலையில், தற்போது கம்பு அதிகளவில் விளைக்கப்படுகிறது. பெரும்பாலும் சோளப்பயிர்களை மாடுகளுக்கு பச்சையாக அறுத்து போடுவதால், பால் நன்றாக கரப்பதாக கூறுகின்றனர். அதனால் சோளம் தானியமாகும் வரை விட்டு வைப்பதில்லை. ஆனால், கம்பை அப்படியே முற்றும் வரை விட்டு வைத்து, முற்றிய பிறகு அறுத்து காயவைத்து தானியமாக்குகின்றனர். மேலும், கம்பின் கூழ் உடல் சூட்டை தணிப்பதால், அதை உணவாக மக்கள் எடுத்துக்கொள்கின்றனர். அதற்காகவே சாகுபடி செய்யும் கம்பானது 3 மாதங்களில் விளைச்சலை தருகிறது. ஒரு ஏக்கருக்கு 1500 முதல் 2000 கிலோ வரை மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.