போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்ற 189 பேருக்கு அரசு பணி
கிருஷ்ணகிரி, ஜூலை 24: கிருஷ்ணகிரி மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயின்ற 189 பேர் போட்டித் தேர்வில் பெற்றி பெற்று, அரசுப் பணிகளில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் படித்த இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்துடன் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட, பெருந்தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு வரவழைத்து, அந்நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து, அந்நிறுவனங்களில் தமிழகத்தில் படித்தவர்களுக்கு வேலை வழங்க ஒப்பந்தம் போட்டு, வேலைவாய்ப்பினை உருவாக்கி வருகிறார்.
படித்த இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்திருக்காமல், தனியார் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை பெற்றிடும் வகையில், ஆங்காங்கே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்தி, வேலை அளிக்கும் நிறுவனத்தையும், வேலை தேடுபவர்களையும் ஒருங்கிணைத்து, வேலைவாய்ப்பையும் அரசு உருவாக்கி வருகிறது. போட்டித் தேர்விற்கு படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், பெருநகரங்களில் உள்ள போட்டித் தேர்வு மையங்களுக்கு சென்று, அதிக கட்டணம் செலுத்தி படிக்க வேண்டிய நிலை இருந்தது. அதற்கான வசதிகள் இல்லாமல் ஏராளமான இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் தாங்கள் உயர் கல்வியை பயின்றும், போட்டித் தேர்வில் வெற்றி பெற இயலாமல் மனஉளைச்சலுக்கு உள்ளாகினர். இந்த அவல நிலையை போக்க ஏதுவாக, தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சியினை வழங்கி வருகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எதிரில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம், போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இம்மையத்தின் வாயிலாக டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 4 மற்றும் டிஆர்பி போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சி மையத்தில் படித்த 189 பேர், தற்போது பல்வேறு அரசு துறைகளில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 21ம் தேதி முதல் குரூப் 2 மற்றும் 2 ஏ போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் கூறுகையில், ‘மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே 50க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். தேர்வர்களின் வசதிக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நூலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் வாயிலாக பயிற்சி பெற்றவர்களில், தற்போது வரை 189 பேர் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றி வருகின்றனர். எனவே, படித்த இளைஞர்கள், இவ்வலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடைய கேட்டுக்கொள்கிறேன்,’ என்றார்.