அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலை, மாலை நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு தேவை
க.பரமத்தி, ஜூலை 28: சின்னதாராபுரம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கு போலீசாரை பணியமர்த்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் சின்னதாராபுரம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்னதாராபுரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளிகள் சின்னதாராபுரம் தென்னலை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இதில் பள்ளிகளை சுற்றியுள்ள கிராம புறங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி தொடங்கும் மற்றும் விடும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு சைக்கிள் மற்றும் நடந்து செல்லும் மாணவ, மாணவிகள் ரோட்டை கடக்க முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர்.
ஒரு சில நேரங்களில் பள்ளி விடும் வேலைகளில் மாணவ, மாணவிகள் வீட்டிற்கு செல்லும் ஆர்வத்தில் வேகமாக பள்ளியை விட்டு வெளியே வருகின்றனர். இப்பள்ளிகள் உள்ள சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் விபத்து நேரிட வாய்ப்புள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளி சின்னதாராபுரம் தென்னலை நெடுஞ்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் தொடங்கும் மற்றும் விடும் நேரங்களில் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.