கடந்த ஆண்டு கட்டப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அதிகாரிகள் ஆய்வு
க.பரமத்தி, ஜூலை. 24: நிலத்தடி நீர் மட்டம் உயர மழைநீர் சேமிப்பு திட்டம் அவசியம் தேவை என்பது குறித்த மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
க.பரமத்தி ஒன்றியத்தில் அணைப்பாளையம், அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு, கார்வழி, காருடையம்பாளையம், கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புஞ்சைகாளகுறிச்சி, நடந்தை, நெடுங்கூர், க.பரமத்தி, பவித்திரம் உள்ளிட்ட 30 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களில் போதிய மழை இல்லை. எனவே நிலத்தடிநீர் மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இதனால் ஒரு சில குக்கிராமங்களில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
புதிய வீடுகள் கட்டும்போது அதில் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கவேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆனால் பொதுமக்களிடம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைப்பது குறித்து எவ்விதமான விழிப்புணர்வையும் ஒன்றிய, ஊராட்சி நிர்வாகங்களால் ஏற்படுத்தவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வீடுகள் தோறும் கட்டப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை மீண்டும் சரி செய்ய பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த ஒன்றிய, ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். வரும் காலங்களில் மழை பெய்தால் மழைநீர் வீணாக வாய்ப்புள்ளது.
கடந்த 8ஆண்டுகளுக்கு முன் குடிசை வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்கள் ஆகியவைகளில் கூட மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கென அதிகாரிகள் குழுவினர் தனியாக அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். வீடு வீடாக சென்று மழைநீர் சேமிப்பு திட்டம் குறித்து விளக்கம் அளிப்பது, பொது இடங்களில் பேரணி, துண்டு பிரசுரம் விநியோகம் போன்ற நடவடிக்கைகளை ஒன்றிய, ஊராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.