புலியூர் அருகே பைக்கிலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கடவூர், ஜூலை 31: புலியூர் அருகே பைக்கிலிருந்து விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழந்தார். கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஊத்துக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (36), கூலித்தொழிலாளி. கடந்த 24ம் தேதி கோவிந்தராஜ் கடவூர் அருகே தரகம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு துக்க காரியத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் மீண்டும் தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கரூர்-மணப்பாறை மெயின் ரோட்டில் உள்ள குளத்தூர் பஸ் ஸ்டாப் அருகே செல்லும்போது கோவிந்தராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து சிந்தாமணிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.