தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
கரூர், ஜூலை 31: கரூரில் நடந்த தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான உறுப்பினர் சேர்க்கையை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாநில செயலாளர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். மாநில பார்வையாளராக மாநில துணைத்தலைவர் கிருஷ்ணவேணி கலந்து கொண்டு மாநில செயல்பாடுகள் குறித்து பேசினார். மாவட்டச் செயலாளர் அமுதன் கலந்து கொண்டு பொருள் வாரியான விளக்கம் குறித்து பேசினார்.
இந்த கூட்டத்தில், அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.ஆகஸ்ட் 2 இயக்க நாளை முன்னிட்டு இயக்க கொடியை அனைத்து வட்டாரங்களிலும் ஏற்றி கொண்டாடுவது, ஆகஸ்ட் 22 அன்று டிட்டோஜாக் சார்பில் கோட்டை முற்றுகை போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வது. நடப்பு கல்வியாண்டிற்கான உறுப்பினர் சேர்க்கையை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடிப்பது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.