பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.66 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் : மாவட்ட கலெக்டர் வழங்கினார்
கரூர், நவ, 18: பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 22 17.66 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்து, மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை வந்து, கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர். இந்த குறைதீர் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் முதல் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை மனுக்களும், கனிவுடன் பெறப்பட்டு, துறை அதிகாரிகளிடம் வழங்கி, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவுகளை வழங்கி வருகிறார்.
இதனடிப்படையில், அனைத்து தரப்பு மக்களும் நம்பிக்கையுடன் வந்து இந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மனுக்களை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.கருர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார். இதனடிப்படையில், நேற்று கருர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், ஒய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு மொத்தம் 388 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 34 மனுக்கள் பெறப்பட்டது.
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு நேற்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ. 7.05 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களையும், 4 பயனாளிகளுக்கு ரூ. 13.140 காதொலி கருவிகளையும்,
1 பயனாளிக்கு ரூ. 1.15லட்சம் மதிப்பிலான பேட்டரி வீல் சேர் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ. 8.33 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.இந்த முகாமில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் யுரேகா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.