கவனத்தை சிதைக்கும் தடுப்புச்சுவர் நோட்டீஸ்கள்
கரூர், ஜூலை. 29: வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தடுப்புச் சுவர்களில் நோட்டீஸ்கள் ஒட்டப்படுவது தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை சாலை, வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, சுங்ககேட் தாந்தோணிமலை, காந்திகிராமம், சுக்காலியூர் ஆகிய முக்கிய சாலைகளின் மையத்தில் விபத்தினை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இந்த தடுப்புச் சுவர்களில் தனியார் அமைப்புகள் மற்றும் சில கட்சிகளின் சார்பில் விளம்பரங்கள் மற்றும் நோட்டீஸ்கள் ஒட்டப்படுகிறது. இவை அனைத்தும் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
விபத்தை குறைக்கும் வகையில் இந்த தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற விளம்பர நோட்டீஸ்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதற அதிகளவு வாய்ப்புகள் உள்ளதோடு, இதன் காரணமாக விபத்துக்களும் நடைபெறும் சூழல் உள்ளது.சமீப காலமாக இதுபோன்ற நிகழ்வுகள் தற்போது அதிகளவு நடைபெற்று வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை முற்றிலும் கட்டுப்படுத்தவும், தேவையான விழிப்புணர்வை வழங்கவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.