இடைக்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாமதமாக பணிக்கு வரும் ஊழியர்களால் நோயாளிகள் அவதி அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அருமனை, ஜூலை 31: அருமனை அடுத்த இடைக்கோடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவு வசதி உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் காலை 8 மணி வரை, 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் ஒருவர் கூட பணியில் இல்லை என நோயாளிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு, காலை 9 மணிக்கு மேல், தனியார் மருத்துவமனையில் முதலாம் மற்றும் 2ம் ஆண்டு நர்சிங் படிக்கும் மாணவிகள் ஊசி போட்டு மருந்து, மாத்திரைகள் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக சிறுவர்களுக்கு, இந்த பயிற்சி மாணவிகள் எப்படி ஊசி போடுவது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். மருந்துகளை பாட்டிலில் இருந்து எடுக்க வேண்டிய அளவு குறித்தும் அவர்களுக்கு தெரியவில்லை.
அதுபோல குழந்தைகளுக்கு எந்த சிரிஞ்ச் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என பெற்றோர் குமுறுகின்றனர். அருகில் டாக்டர் மற்றும் செவிலியர் இல்லாமல் பயிற்சி மாணவர்கள் எப்படி ஊசி போட இயலும்? மருந்துகளை மாற்றி கொடுத்தால், நோயாளிகளுக்கு என்ன நிலைமை ஏற்படும் என்ற கேள்விகளை முன்வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மேலும் இதனால் நோயாளிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாளர்களின் காலதாமத வருகையால், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு மருந்து வாங்க வந்தால் மிகவும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அன்றைய தினம் பள்ளிக்கூடம் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.