இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
போரூர்: சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 18 வயது இளம்பெண், நேற்று முன்தினம் மாலை, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கூறியிருப்பதாவது: அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் ராஜேஷ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
அவர் என்னை காதலிப்பதாக கூறினார். பின்னர், தனியார் விடுதிக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் தொந்தரவு செய்தார். தற்போது எனது செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (25) என்பவரை கைது செய்தனர்.