சவ ஊர்வலத்தின் போது நாட்டு பட்டாசு வெடித்து பள்ளி மாணவி படுகாயம்
துரைப்பாக்கம், ஜூலை 26: அக்கரை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேஷ்குமார் (38), தனியார் நிறுவன பாதுகாப்பு பிரிவு மேலாளர். இவரது மனைவி சகாயமேரி. இவர்களது மூத்த மகள் நிஷாந்தினி (10), வெட்டுவாங்கேணியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது இறுதி ஊர்வலம் எதிரில் வந்துள்ளது.
அதில், வெடிக்கப்பட்ட பட்டாசுகள் சாலையில் சிதறின. அதில், ஒன்று நிஷாத்தினி முகத்ததில் பட்டு வெடித்தது. இதில், சிறுமியின் இடது கண், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, முகத்தில் தையல்கள் போடப்பட்டு, அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் படி, நீலாங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சவ ஊர்வலத்தில் நாட்டு பட்டாசு பயன்படுத்தியதால் சிறுமி படுகாயமடைந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, கணேசனின் குடும்பத்தை சேர்ந்த கலைமுருகன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.