வாலாஜாபாத் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் 195 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு
வாலாஜாபாத், ஜூலை 31: வாலாஜாபாத் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள ராஜவீதியில் பாழடைந்த மண்டபம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் அண்ணாந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டொன்று உள்ளதை வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் எம்.டி.அஜய்குமார் மற்றும் செயலாளர் ந.மோகனகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அந்த கள ஆய்வின் விவரம் பின்வருமாறு, இந்த கல்வெட்டு குறித்து அவர்கள் குறிப்பிட்டதாவது 1829ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு 195 ஆண்டுகள் பழமையானது. சாலிவாக சகாப்தம் ஆண்டு 4930, கலி ஆண்டு 1751, தமிழ் ஆண்டு விரோதி வருடம், ஆவணி மாதம் 10ம் நாள் வாலாஜாபாத்திலிருக்கும் ஆற்காடு காலெக்கற் வயிகறை ரிஷி கோத்திரம் கோவிந்தராவ் என்பவரின் மகன்கள் மனோஜி ராவ், சேதுராவ் ஆகியோர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சங்கராந்தி பார்வேட்டைக்கு கட்டிய சத்திரம், குளம் தோட்டம் எனவும், அதன் அளவு விவரங்களும், இச்சத்திரத்தை நிர்வகிக்க வல்லபாக்கம் கிராமத்தில் நிலம் கிரயமாக வாங்கி விட்ட விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த கல்வெட்டு செய்தியை தொல்லியல் துறையின் உதவி கல்வெட்டாய்வாளர் ப.த.நாகராஜன், உதவி தொல்லியல் கண்காணிப்பாளர்கள் இரா.ரமேஷ் மற்றும் மோ.பிரசன்னா, வரலாற்று ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் ஆகியோரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த பாழடைந்த மண்டபத்தை புதுப்பிக்க தன்னார்வலர்கள் குழு முயன்றபோதும் அனுமதி கிடைக்கவில்லை. மேலும், வாலாஜாபாத் வரலாற்றுச் சான்றாக திகழும் இந்த மண்டபத்தையும் கல்வெட்டையும் வருங்கால தலைமுறையினரும் அறியும் வகையில் தொல்லியல் துறை அல்லது இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாழடைந்த மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கவும் பராமரிக்கவும் வேண்டும் எனவும் வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு யைமத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.