துபாயிலிருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்கள் பறிமுதல்: சென்னை பயணியிடம் சுங்கத்துறை விசாரணை
மீனம்பாக்கம், ஜூலை 30: துபாயில் இருந்து தனியார் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு வந்த சென்னையை சேர்ந்த 42 வயது ஆண் பயணி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, அவர் எடுத்து வந்த பையில் ரூ.35 லட்சம் மதிப்பிலான 1,400 வெளிநாட்டு இ-சிகரெட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக இ-சிகரெட்களை கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, சென்னை பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.