ஜெயலலிதா, சசிகலா அபகரித்த நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்கக்கோரி மா.கம்யூ கட்சியினர் குடியேறும் போராட்டம்
திருப்போரூர், ஆக.1: திருப்போரூர் அருகே ஜெயலலிதா, சசிகலா அபகரித்த நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்கக்கோரி மா.கம்யூ கட்சியினர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 1967ம் ஆண்டு அப்போதைய முதல்வர் அண்ணாவால், திருப்போரூர் ஒன்றியம், சிறுதாவூர் கிராமத்தை சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளர்கள் 20 பேருக்கு, தலா 2 ஏக்கர் நிலம், 10 சென்ட் குடியிருப்பு மனை போன்றவை வழங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காலகட்டங்களில் இந்த சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு, கடைசியில் ஜெயலலிதா, சசிகலா பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த, சொத்தில் பங்களா கட்டப்பட்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அடிக்கடி சென்று தங்கி வந்தார். இந்நிலையில், இந்த நிலங்களை மீட்டுத்தரக்கோரி கடந்த 2006ம் ஆண்டு முதல் மா.கம்யூ., சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், நீதிபதி சிவசுப்ரமணியம் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் தலித் மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிலங்களையும், வீட்டு மனைகளையும் அரசே திரும்ப ஏற்க வேண்டும் என்றும், அந்த வளாகத்தில் உள்ள 34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களையும் மீட்க வேண்டும் என்றும், நிலமில்லாத ஏழைகளுக்கு இந்த நிலங்களை வழங்கலாம் என்றும் அறிக்கை அளித்தது. இந்நிலையில், இந்த நிலங்களை மீட்கக் கோரியும், நிலமில்லாத ஏழை மக்களுக்கு வழங்கக் கோரியும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று சிறுதாவூர் அடுத்த கருங்குழிப்பள்ளம் கிராமத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா தலைமை தாங்கினார். திருப்போரூர் ஒன்றிய செயலாளர் செல்வம் வரவேற்றார். மா.கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்துக்கொண்டு பேசினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மாலை 3.30 மணியளவில் ஓ.எம்.ஆர். சாலையில் சமார் 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, திருப்போரூர் போலீசார் அவர்களை கைது செய்து திருப்போரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். ஆனால், அரசுக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகை வைத்தால் தான் கலைந்து செல்வோம் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்தததால், செங்கல்பட்டு சார் ஆட்சியர் மாலதி ஹெலன், மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அறிவழகன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.