திருப்போரூர் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருப்போரூர், ஜூலை 29: திருப்போரூர் பேரூராட்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் கடைகள், ஓட்டல்கள், டீ கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகள், டம்ளர்கள், கவர்கள் போன்றவை விற்பனை செய்யப்படுவதாக பேரூராட்சி அதிகாரிக்கு தகவல் வந்தது. அதன்பேரில், செயல் அலுவலர் சங்கீதா தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள், ஓஎம்ஆர் சாலை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இந்த, சோதனையில் சுமார் 200 கிலோ அளவுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றை, விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு 5200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.