இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு முகாம்: தாம்பரத்தில் நடக்கிறது
காஞ்சிபுரம், ஜூலை 29: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய விமானப்படை சார்பில் அக்னிவீர் வாயு வகுப்பிற்கான சிறந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தேர்வு மையத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவு (விஜயபுரம்) ஆகிய பகுதிகளில் உள்ள தகுதி வாய்ந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், ஆண் விண்ணப்பதாரர்கள் செப். 2.9.2025 காலை 4 மணிக்கும், ெபண் விண்ணப்பதாரர்கள் 5.9.2025 காலை 5 மணிக்கும் கலந்து கொள்ளலாம்.
மேலும், இம்முகாமில் கலந்துகொள்ள 50 சதவீத மதிப்பெண்களுடன் 12ம் வகுப்புக்கு சமமான (ஏதேனும் ஒரு பாடப்பிரிவில்) மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 1.1.2026 தேதியின்படி 17½ ஆண்டுகளுக்கு மேற்பட்டும், 21 ஆண்டுகளுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும் என தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்முகாம் பற்றிய அறிவிக்கை மற்றும் முழு விவரங்களை அறிய www.agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்திய விமானப்படையில் சேவை செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள், இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.