இனப்பெருக்க காலம் முடிந்து சொந்த நாடுகளுக்கு பறவைகள் சென்றதால் வெறிச்சோடிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
மதுராந்தகம், ஜூலை 29: இனப்பெருக்க காலம் முடிந்து, குஞ்சுகள் பெரிதானதை தொடர்ந்து, பறவைகள் சொந்த நாடுகளுக்கு சென்றதால் பறவைகள் இன்றியும், பார்வையாளர்கள் இன்றியும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகேயுள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரி 36 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் நீர் மட்டம் 16 அடி உயரம். தற்போது, தண்ணீர் குறநை்த அளவே காணப்படுகிறது. இந்நிலையில், கனடா, வங்கதேசம், இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வந்து செல்கின்றன. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரமான குளிர்காலத்தில் பறவைகள் வலசை வரத் துவங்குகின்றன. பின்னர், டிசம்பரம், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வலசை வரும் பறவைகளின் கூட்டம் படிப்படியாக அதிகமாக தொடங்கும்.
பின்னர், இனப்பெருக்கம் முடிந்தது, மார்ச், ஏப்ரல், மே மாதத்தின் கடைசி வராத்தில் தாய்நாட்டிற்கு திரும்பிவிடுவதால் பறவைகள் எண்ணிக்கை படிப்படியாக மிகவும் குறைந்து காணப்படும்.இந்நிலையில், இந்த ஆண்டு கூழைக்கடா, கரண்டி வாயன், நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், முக்குளிப்பான் மற்றும் புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை, குருட்டு கொக்கு, சாம்பல் நிற கொக்கு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்தன. இதில், 40 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி இருந்து இரண்டு மடங்காக இனப்பெருக்கம் செய்து மீண்டும் சொந்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றன. தற்போது, பறவைகள் சென்ற நிலையில் வேடந்தாங்கல் சரணாலயம் பறவைகள் இன்றியும், அதனை காண வரும் பார்வையாளர்கள் இன்றியும் வெறிச்சோடி காணப்படுகிறது.