சிறுமிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு ஆயுள்
செங்கல்பட்டு, ஜூலை 25: மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது பெற்றோருடன் 12 வயது சிறுமி வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் நாகதாஸ் (45), விவசாயி. இந்நிலையில் கடந்த 19.10.2018ம் தேதி சிறுமி அவரது அம்மாவின் புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தததாக கூறப்படுகிறது. அப்போது, நாகதாஸ் சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக கூறி அவரது வீட்டிற்கு கடத்தி சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து தனக்கு நடந்த சம்பவத்தை அழுதுகொண்டே சிறுமி அவரது தாயாரிடம் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அவர்மீது போக்சோ பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்தவழக்கை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் லட்சமி ஆஜராகி இருதரப்பு வாதங்களை கேட்டு வாதாடினார்.
இறுதிகட்ட விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி நசீமாபானு இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட நாகதாஸ் குற்றவாளி என நிரூபணமானது. இதனால் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.