மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த, குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு, சிவன் கோயில் தெருவில் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த, டிரான்ஸ்பார்மரில் இருந்து வீடுகள் மற்றும் விவசாய மின் மோட்டார்களுக்கு மின்சாரம் செல்கிறது. இப்பகுதியில், அதிகமான மின் இணைப்புகள் இருப்பதாலும், அதற்கேற்றவாறு டிரான்ஸ்பார்மர் இல்லாததால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த குறைந்த மின்னழுத்தத்தால் விவசாயிகள் கிணறு மற்றும் போர்வெல் மூலமாக விவசாய நிலத்திற்கு தண்ணீர் இறைக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொடர் மின்னழுத்தம் காரணமாக மின் மோட்டார்கள் செயலிழந்து விடுவதாகவும், அதனை சரிசெய்ய ஆயிரக்கணக்கில் செலவு செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதேபோல், பொதுமக்களும் பல்வேறு வீட்டு மின் சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மானாம்பதி மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக நேரில் வந்து ஆய்வு செய்து கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.