காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூருக்கு 3 அதிநவீன குளிர்சாதன பேருந்து சேவை: எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம், ஜூலை 24: காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் பேருந்துகளுக்கு இணையாக 3 அதிநவீன குளிர்ச்சாதன பேருந்துகள் சேவையை எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக குளிர்சாதன சொகுசு பேருந்துகள் பச்சை நிறத்திலும், பிஎஸ் 4 பேருந்துகளின் நீலம் நிறத்திலும் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகளின் பார்வைக்கு பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதற்காக, பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மஞ்சள் நிறத்திற்கு கடந்த 2023ல் மாற்றப்பட்டு, பெரும்பாலான மாவட்டங்களில் மஞ்சள் நிறத்தில் பேருந்துகள் இயங்கி வருகின்ற நிலையில், பேருந்துகளின் நிறத்தை தமிழக அரசு மாற்றியுள்ளன. அதன்படி, முதல் கட்டமாக குளிர்சாதன பேருந்துகள் மேல் பகுதி கருப்பு, கீழ் பகுதி சாம்பல் நிறத்திலும் பார்டர் பகுதியில் மஞ்சள், ஆரஞ்ச், வெண்மை நிறத்துடன் வண்ணம் பூசப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகளுக்கு இணையாக சவால்விடும் வகையில் அரசு பேருந்துகள் மாற்றப்பட்டுள்ளன. அந்த வகையில், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தனியார் பேருந்துகளுக்கு நிகராக அதிநவீன அரசு குளிர்சாதன பேருந்தில் பயணிகள் வசதிக்காக செல்போன் சார்ஜர், குளிர் சாதனம், பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா, நடத்துனர் வசதிக்காக சிசிடிவி கேமரா, பயணிகள் இறங்கும் இடத்தை மைக் மூலம் தெரிவித்தல் போன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய பேருந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூரு மற்றும் தாம்பரம் ஆகிய வழித்தடங்களுக்கு 3 அதிநவீன குளிர்சாதன பேருந்து சேவை வசதிக்காக துவக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் பங்கேற்று, அதிநவீன ஏசி பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், திமுக மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ராமகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல குழு தலைவர் சந்துரு, பகுதி செயலாளர் திலகர், போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.