பழநி, ஒட்டன்சத்திரம் வன எல்லைகளில் யானைகள் நடமாட்டம் மீண்டும் அதிகரிப்பு: விவசாயிகள் கவலை
பழநி, ஜூலை 28: பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதி எல்லைகளில் யானைகளின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரத்திற்குட்பட்ட மலையோர கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் சோலார் மின்வேலி அமைத்தல், அகழி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பலன் ஏதுமில்லை. பழநி மற்றும் ஓட்டன்சத்திரம் வனப்பகுதியை ஓட்டிய கிராமங்களில் மக்காச்சோளம் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக வனப்பகுதி எல்லைகளில் யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.
இவை உணவு தேடி வனப்பகுதி எல்லைகளை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து விடும் அபாயம் நிலவுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த வாரம் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட ஆயக்குடி பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்த யானை கூட்டம் தென்னை, கொய்யா மரங்களை சேதப்படுத்தி உள்ளன. வனத்துறை அதிகாரிகள் யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோம்பைபட்டியை சேர்ந்த விவசாயி துரை கூறியதாவது: வனப்பகுதி எல்லைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது. சில சமயம் கூட்டமாகவும், சில முறை ஒற்றையாகவும் வந்து தொல்லை தருகின்றன. விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துடன், வீடுகளையும் இடித்து சேதப்படுத்தி விடுகின்றன. எனவே வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். சேதமடையும் பயிர்கள் மற்றும் வீடுகளுக்கு இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார்.