திண்டுக்கல் வந்த ரயிலில் 11 கிலோ கஞ்சா பார்சல் பறிமுதல்
திண்டுக்கல், ஜூலை 30: கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்பொழுது திண்டுக்கல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா புகையிலைப் பொருட்கள் வெளிமாநில மது பாட்டில்கள் ரயில்களில் கடத்தி வருவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், ஏட்டுக்கள் ராஜா, சந்திரசேகர், வெங்கடேஸ்வரன், குமார், சக்தி சண்முகம், மற்றும் தனிப்பிரிவு போலீசார் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து அந்த ரயிலில் ஏறி முன்பதிவு இல்லாத பெட்டிகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையை சோதனை செய்தனர். அப்போது அந்தப் பையில், 11 கிலோ மதிக்கத்தக்க கஞ்சா பார்சல் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அதனை பறிமுதல் செய்த போலீசார் யார் எங்கிருந்து கடத்தி வந்தார்கள் என்றும் போலீசாரை கண்டதும் பையை போட்டுவிட்டு சென்றனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.