கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட கனரக வாகனங்கள் பயன்பாடு: வருவாய்த்துறையினர் போலீசில் புகார்
கொடைக்கானல், ஜூலை 29: கொடைக்கானலில், கனரக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த்துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் கனரக வாகனங்களான ஜேசிபி, ஹிட்டாச்சி, கம்ப்ரஸர், போர்வெல் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க கூடாது என கொடைக்கானல் ஆர்டிஓ திருநாவுக்கரசு, கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இது போன்ற கனரக வாகனங்கள் இருந்தால் அதனை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொடைக்கானல் கிராம நிர்வாக அலுவலர் பரத், தனது நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 24 கனரக வாகனங்கள் உள்ளதாகவும், இந்த வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல கொடைக்கானல் மேல் மலை பகுதிகளான கூக்கால் மற்றும் மன்னவனூர் பகுதியில், ஆறு கனரக வாகனங்கள் ஆர்டிஓவின் தடை உத்தரவை மீறி இந்த பகுதியில் இருப்பதாகவும், இரவு நேரங்களில் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த வாகனங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூக்கால் கிராம நிர்வாக அலுவலர் சுசீந்திரன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.