ஒட்டன்சத்திரத்தில் வாகனங்களில் ஏர் ஹாரன்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஒட்டன்சத்திரம், ஜூலை 29: சாலைகளில் செல்லும் போது அதிக ஒலி எழுப்பி பொதுமக்களின் காதுகளை பதம் பார்க்கும் ஏர் ஹாரன்களை வாகனங்களில் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடை உத்தரவை மீறி ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சாலைகளில் செல்லும் மற்ற வாகனஓட்டிகள், பாதசாரிகள் ஏர் ஹாரன் எழுப்பும் அதிக ஒலியால் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும், டூவீலரில் செல்வோரில் சிலர் அதிர்ச்சியில் கீழே விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்திலேயே அடிக்கடி ஒலிக்கும் ஏர் ஹாரன் சத்தத்தால் பயணிகள் பாதிப்படைகின்றனர்.
குறிப்பாக ரத்த அழுத்தம் உடையோர், கர்ப்பிணிகள், இருதய நோயாளிகள், குழந்தைகள் ஏர் ஹாரன்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், அடுத்த சில நாட்களில் மீண்டும் தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்களை பயன்படுத்த துவங்கி விடுன்றனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் நேரில் ஆய்வு செய்து ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், அதிகபட்சம அபராதம் விதித்து இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.