நத்தம் அருகே இருதரப்பு மோதல் 7 பேர் மீது வழக்கு
நத்தம், ஜூலை 24: நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி முசுக்கம்பட்டியை சேர்ந்தவர் லக்கையன் (54). விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் லக்கையன் தோட்டத்திற்குள் செல்வராஜின் ஆடு, மாடுகள் புகுந்ததில் அங்குள்ள செடி, கொடிகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜை, லக்கையன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் லக்கையனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
பதிலுக்கு லக்கையனும் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பிலும் நத்தம் காவல் நிலையத்தில் புகார்கள் அளித்தனர். இதன்பேரில் எஸ்ஐ தர்மர் இரு தரப்பை சேர்ந்த செல்வராஜ், முத்துப்பாண்டி (30), பொம்முத்தாய் (60), கௌதம் (29), சுகன்யா (30), லக்கையன் (54), அஜித் (27) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.