திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கிய 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திண்டுக்கல், ஜூலை 28: திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5.5 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் பகுதியில் விற்பனைக்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்படுவதாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா, எஸ்ஐ ராதா மற்றும் போலீசார் திண்டுக்கல் நகர், புறநகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டிலும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேனிலும் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். மொத்தம் 110 மூட்டைகளில் 5,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசி மூட்டைகள், வேனை பறிமுதல் செய்து பதுக்கி வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
இதில் திண்டுக்கல் மருதாணிகுளம் மதுரை வீரன் கோயில் தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் (30), சிலுவத்தூரை அடுத்த சங்கிலித்தேவனூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (19) ஆகியோர் திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி, மருதாணிகுளம், சின்னாளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து கால்நடை தீவனம் தயாரிப்பவர்களிடம் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து வெங்கட்ராமன், ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.