டிரான்ஸ்பார்மர் பழுதால் இருளில் மூழ்கிய கிராமம்
அரூர், ஜூலை 14: டிரான்ஸ்பார்மர் பழுதால் அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி கிராமம் கடந்த இரண்டு நாளாக இருளில் மூழ்கியுள்ளது. அரூர் தாலுகா, எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில், சுமார் 6 மாதங்களுக்கு முன்பு சித்தேரி மின்பாதையில் இருந்து 25 கிலோவாட் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டிரான்ஸ்பார்மரில் திடீரென பழுது ஏற்பட்டதால், கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் கிராமம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. எல்லப்புடையாம்பட்டியில் புதியதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கும்போதே மின்கம்பம் உடைந்துள்ளது. சேதமடைந்த மின்கம்பத்தில் மின்மாற்றி அமைத்ததால், பழுது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருவதால், டிரான்ஸ்பார்மரை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.