ஆடி அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி, ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனைகள் நடந்தது. முத்தம்பட்டி ஆஞ்சநேயர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாலையுடன் கூடிய சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து துளசி, வெற்றிலை மாலை, தேங்காய் பழம், எலுமிச்சை பழம் செலுத்தி ஆஞ்சநேயரை வழிபட்டனர். மேலும், கோயில் வளாகத்தில் நெய் தீபமேற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வனத்துறையினரும், பொம்மிடி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தர்மபுரி டவுன் சாலை விநாயகர் கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு விஷே அலங்காரமும், தொடர்ந்து பூஜைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தொப்பூர் மன்றோ குளக்கரை ஜெயவீர ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம், காப்பு பாராயணம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொப்பூர் ஆலமரத்து கொட்டாய் பெண்டிச்சி அம்மன் கோயிலில் நேற்று குலதெய்வ வழிபாடு நடந்தது. இதில் பங்காளி வகையறாக்கள் பொங்கல் வைத்து படையலிட்டு அம்மனை வழிபட்டனர்.
பாப்பாரப்பட்டி மாரியம்மன் கோயிலில் விசேஷ பூஜைகள் நடந்தது. பக்தர்கள் பூங்கரகம், தீச்சட்டி மற்றும் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மன் ஊஞ்சல்சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன், ஊர் மாரியம்மன் கோயில்களிலும் நேற்று விசேஷ பூஜைகள் நடந்தது.